தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

பெண்களே தொழிலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

பெண்களே தொழிலில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?

வாழ்வில் பொருளாதார வளம் பெற நினைப்பவர்களின் முதல் தேர்வு, தொழில். உங்களுக்கும் தொழில் புரியும் ஆர்வம் இருக்கலாம். அதற்கு உங்களுக்கு என்னென்ன தேவை?


1) உங்கள் மனதுக்குப் பிடித்த தொழிலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லாத தொழிலில் ஈடுபட்டால் வெற்றி கிட்டாது. நீங்கள் செய்யத் தொடங்கும் தொழில் உங்களின் கனவுத் தொழிலாக இருந்தால், அது நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தைத் தரும். உங்கள் ஈடுபாடு அதுதான் என்றால், அதில் நீங்கள் சாதாரணமாகச் செயல்படுவதைவிட இரண்டு மடங்கு அதிகமாகச் செயல்படுவீர்கள். வேலை பார்ப்பது போலவே உணர மாட்டீர்கள். வெற்றியும் விரைந்து வரும்.


2) தொழிலில் சில நேரங்களில் சில சோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டி வரும். அதுபோன்ற நேரங்களில் கொஞ்சமும் தயங்காதீர்கள். தயங்காமல் சோதனை முயற்சிகளில் ஈடுபடுவது தொழிலில் ஈடுபடுவோருக்கு, முடிவெடுக்கும் திறனையும், தொழில் மீதான அவருடைய தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்.


3) ஒரு தொழிலைத் தொடங்க நினைத்தாலோ அல்லது விரிவாக்க நினைத்தாலோ உடனடியாக அதைச் செயல்படுத்தி விட வேண்டும். தகுந்த சூழல் வரவில்லை என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தால், வேறொருவர் முந்திவிட வாய்ப்பு உண்டு.


4) தொழில் என்றாலே மிகப் பெரிய முதலீடு தேவை என்ற எண்ணம் அவசியமில்லை. சிறு முதலீட்டிலும் வெற்றிகரமாக உயரக்கூடிய தொழில் வாய்ப்புகள் உண்டு. கொஞ்சம் சந்தை ஆய்வு செய்தால் போதும். அதேபோல, வங்கியில் தொழில் கடன் பெறுவதற்காக நமது மதிப்பீட்டை அதிகப்படுத்திக் கூறத் தேவையில்லை. தேவைக்கு அதிகமான கடன் கிடைத்தால், அதை திருப்பிச் செலுத்தும்போது சிரமமாக இருக்கும்.


5) தொழிலில் ஏற்படும் போட்டியை தொந்தரவாகக் கருதுபவர்கள் சோபிக்க முடியாது. தொழில் போட்டி என்பது தவிர்க்க முடியாதது. போட்டிதான் உத்வேகமும், புதிய அணுகுமுறைக்கான யோசனையும் தரும். எத்தனை போட்டி இருந்தாலும் தன் மீதும், தன் தொழில் மீதும் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் சுணங்கிப் போகமாட்டார்கள்.


6) ஒரு பொருள் அல்லது சேவையை முதலில் அறிமுகம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தால் அதைத் தவற விடக்கூடாது. எதிலும் முன்னோடியாய் இருப்பவர்களுக்கு தனி மதிப்பும், வெற்றி வாய்ப்பும் அதிகம் என்பதை உணருங்கள். உங்களைப் பின்பற்றி பலர் வந்தாலும், குறிப்பிட்ட விஷயத்தில் முதலில் இறங்கிய அனுகூலம் எப்போதும் உங்களுக்கு இருக்கும்.


7) தொழிலில் ஈடுபடுவோருக்கு நேர்மறை மனோபாவம் அவசியம். சிறப்பான அணி, நல்ல தயாரிப்பு, விற்பனை வாய்ப்பு எல்லாம் இருந்தாலும், அச்சாணியாய் திகழும் தொழில்முனைவாளர் தன்னம்பிக்கை மிக்கவராக இருப்பது அவசியம். புதிய வாய்ப்புகளைத் தேடும் முனைப்பு, தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் துடிப்பு எல்லாம் அவருக்கு அத்தியாவசியம்.


8) தொழிலில் குறுகிய கால இலக்கு, நீண்ட கால இலக்கு என்று நிர்ணயித்துச் செயல்பட வேண்டும். சில இலக்குகளை, சில சூழல்களினால் எட்ட முடியாமல் போகலாம். அதற்காக சோர்ந்து போகத் தேவையில்லை. தொழிலில் எதிர்பாராத சறுக்கல்களைப் போல, எதிர்பாராத சாதகமான சூழல்களும் வரும்.


9) தொழிலில் அறிவுப்பூர்வமாகத்தான் செயல்பட வேண்டுமே தவிர, உணர்ச்சிமயமாய் அல்ல. தேவையற்ற சென்டிமென்டுகள், பிடிவாதங்கள் தொழிலுக்கு உதவாது. காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக்கொண்டு, தொழிலை முன்னேற்றிச் செல்ல வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு அவற்றை நம் தொழிலுக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.


எல்லாவற்றுக்கும் மேலாக, காலம்காலமாக கூறப்படும் பழைய விஷயம் என்றாலும், நேர்மை, உண்மை, தரம் எப்போதும் பலன் தரும்!


தகவல் - kathiravan.com

|