தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சமூக வலைத்தளங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க சில ஆலோசனைகள்!

சமூக வலைத்தளங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க சில ஆலோசனைகள்!

பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இன்றைய இளந்தலைமுறையினர் வாய் திறந்து விட்டால் வாட்ஸ்அப், பேஸ்புக் பற்றித்தான் பேசுகிறார்கள். "தான் பேஸ்புக், வாட்ஸ்அப் பயன்படுத்துவதில்லை" என்று யாராலும் துணிச்சலாக சொல்ல முடிவதில்லை. அப்படிச் சொன்னால் "பட்டிக்காடு, நீயெல்லாம் வேஸ்ட்டு" என்று பரிகாசம் செய்யப்படுவார்கள். "உனக்கு ஒண்ணுமே தெரியாது" என்று ஒதுக்கப்பட்டு விடுவார்கள்.


அப்படி ஒதுக்கிவைத்து விடக்கூடாது என்ற எண்ணத்திலும், அதில் என்னதான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோமே என்ற ஆசையிலும் சமூக வலைத்தளங்களுக்குள் சாரைசாரையாய் மக்கள் அடைக்கலமாகிக்கொண்டிருக்கிறார்கள். அதில் "எனக்கும் எல்லாம் தெரியும்" என்று காட்டிக் கொள்ள நினைக்கும் மேதாவிகள் பலர். இளம் மீன்களுக்கு வலைவீசும் சுறாக்கள் சிலர்.


அரிப்பு எடுத்தால் சொறியாமல் இருக்க முடியாததை போல, கையில் போனை வைத்துக் கொண்டு இணையத்துக்குள் போகாமல் இருக்க முடியாது. அங்கே நம் நட்புகள் அனுபவிக்கும் ஜாலியை நாமும் கொஞ்சம் அனுபவிப்போமே என்று நுழைந்து, அதன் ஆட்டம் புரியாமல் ஆபத்தில் சிக்கிக்கொள்பவர்கள் அனேகம். இதற்கு ஏராளமான உதாரணங்கள் நம்முன் கொட்டிக் கிடக்கின்றன.


இணையம் என்றால் இன்பம் மட்டுமல்ல, இன்னல்களும் மிகுந்தவை என்பதையே ஒவ்வொரு சம்பவங்களும் நினைவுபடுத்துகின்றன. காரணம் இணையத்தில் உலாவரும் எல்லோருக்கும், கணினி மற்றும் இணையம் பற்றிய பூரண தெளிவோ, பாதுகாப்பு அம்சங்களோ தெரியாததுதான்.


"தெரிந்தவர்களுடன் நட்பு வைக்கப்போகிறோம், அரட்டையடிப்போம், ஜாலியாக டைம் பாஸ் பண்ணுவோம், இதில் என்ன வந்து விடப்போகிறது" என்ற அசட்டுத்தனம் கொண்டவர்கள் அதிகம். இந்த அலட்சியம் அவர்களை அறியாமலேயே இம்சைகளுக்குள் இழுத்துச் செல்கிறது. ஏனெனில் மேலோட்டமான புரிதலுடன் இணையத்தில் புகுந்துவிட்டு, அதில் காத்திருக்கும் ஆபத்துகளுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள்.


எனவே தேவை கருதியோ, பொழுதுபோக்கிற்காகவோ பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கும் பெண்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். 


அதற்கான சில யோசனைகளை பார்க்கலாம்.


1) பாஸ்வேர்டு மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். பேஸ்புக் கணக்கு, கணினி என எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ்வேர்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


2) கணக்கு தொடங்கும்போதே நண்பர்களுக்கு மட்டுமே உங்கள் கணக்கு தெரியும்படி ‘செட்டிங்ஸ்’ செய்யலாம். பேஸ்புக் வழங்கும் நுணுக்கமான ‘செட்டிங்’ முறைகளை விவரமான தோழிகளிடம் கேட்டறிந்து பயன்படுத்தலாம்.


3) அவசியம் இல்லாமல் முழுமையான வீட்டு முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட சொந்த விவரங்களை பதிய வேண்டாம்.


4) மறக்காமல் கணக்கை ‘லாக் அவுட்’ செய்து வெளியேறவும். லாக் அவுட் செய்யாமல் வேறு பணிகளில் ஈடுபட்டால்கூட நீங்கள் செய்யும் பணிகளை பிரச்சினைக்குரியவர்கள் வேவு பார்க்கும் வாய்ப்பு உள்ளது.


5) நண்பர்களின் கணினியிலோ அல்லது பிரவுசிங் சென்டர் போன்ற வெளியிடங்களிலோ பேஸ்புக், ஜிமெயில் போன்ற இணைய கணக்குகளை பயன்படுத்தும் முன் ‘சேப் பிரவுசிங்’ உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்த தெரிய வேண்டும்.


6) பேஸ்புக் நட்புறவு ஏற்படுத்தும் தளமாக இருந்தாலும் முன்பின் தெரியாதவர்களை, "பிரண்ட்" ஆக ஏற்கும் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டாம். ஏனெனில் பெண் பெயரில் கணக்குத் தொடங்கி ஏமாற்றுபவர்க ள்கூட இருக்கிறார்கள்.


7) ஆபாச இணையங்கள், அறிமுகமற்ற இணைய தளங்களின் லிங்குகள் ஆகியவற்றை கவனமின்றி கிளிக் செய்யக்கூடாது.


8) பதிவுகளை வெளியிடும்போது மற்ற தனிநபர்களைப் பற்றிய விமர்சனங்கள், பொதுவான கருத்துகள் என கண்டவற்றையும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ஏனெனில் எல்லா கருத்துகளுக்கும் ஆதரவு மற்றும் எதிர் கருத்து உடையவர்களும் இருப்பார்கள், அவர்களால் சர்ச்சை ஏற்படவும், நட்பு ஏற்பட்டு பின்பு தொல்லைகள் வரவும் வாய்ப்பு உள்ளது.


9) தேவையில்லாமல் யாராவது மெசேஜ் அனுப்பிக் கொண்டோ, உங்கள் பதிவுகளில் மூக்கை நுழைத்து வந்தாலோ அவர்களை தடுத்து நிறுத்த ‘பிளாக்’ (bl-o-ck) ஆப்சனை பயன்படுத்தலாம். "அன்பிரண்ட்" ஆப்சனை விட "பிளாக்" ஆப்சன்தான் தொல்லை தருபவர்களை தடுக்கும் சரியான வழி.


10) அழகு அழகாக புகைப்படங்களை எடுத்து அடிக்கடி பதிவு செய்ய வேண்டாம். குறிப்பாக முகம் மற்றும் அங்கங்கள் பளிச்சென்று தெரியும் தனி புகைப்படங்களை பதிவு செய்வதை தவிர்க்கலாம். தேவைப்பட்டால் தோழிகள், நண்பர்கள், உறவினர்களுடன் குழுவாக எடுத்துக் கொண்ட படங்களை வெளியிட்டு மகிழலாம். தனியாகவோ, ஜோடியாகவோ இருக்கும் படங்கள் எளிதில் மார்பிங் செய்து வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


11) போட்டோக்களை பதிவிடும்போது பிரத்தியேகமாக வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களைக் கையாண்டு உங்களுடைய நண்பர் குழுவுக்கு மட்டும் தெரியும்படி செய்யலாம்.


12) கணக்கை நிரந்தரமாக மூட விரும்பினால் ‘ஹெல்ப்’ என்ற ஆப்சனில் சென்று "அக்கவுண்ட் டெலிட்" என்பதை சொடுக்க வேண்டும். இப்படிச் செய்த பிறகு 15 நாட்களுக்கு நமது கணக்கை திறக்காமல் இருந்தால் கணக்கு நீக்கப்பட்டுவிடும்.


எல்லோரும் மகிழ்ச்சியென்று வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும்போது, நீங்கள் மட்டும் கொஞ்சம் ஒதுங்கியிருப்பது சிரமமான காரியம்தான். ஆனால் கண்ணுக்குத் தெரியாத வலையாக விரிந்து கிடக்கும் வலைத்தளத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது. ஒருவேளை ஆபத்தை உணராமல் சிக்கிக்கொண்டாலும், அடுத்தவர்கள் பழிவாங்க உங்களை போலி ஆபாச படமாக புனைந்தாலும் அதற்கு உயிரை விலையாக கொடுக்கவேண்டியதில்லை. புகார் கொடுக்கலாம்! போராடலாம்!! உண்மையை ஏற்றுக்கொள்ள இந்த உலகம் தயாராக இருக்கிறது. குற்றவாளிகளால் ஒருபோதும் தப்ப முடியாது.


தகவல் - kathiravan.com

|