தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

சர்க்கரை நோயை விரட்டும் குறிஞ்சான்!

சர்க்கரை நோயை விரட்டும் குறிஞ்சான்!

தமிழில் சர்க்கரை கொல்லிகள் என அழைக்கப்படும், சிறு குறிஞ்சான் இலை(Gymnema), சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேலிகளில் கொடியாக படரும் தன்மை கொண்ட இந்த சிறு குறிஞ்சான் தாவரத்தின் இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்றும் காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இந்த தாவரம் மிக அதிகமாக வளர்கிறது. 


சமீப காலமாக இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள், சிறு குறிஞ்சான் இலை பற்றிய தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக நீரிழிவு நோயினை இயற்கையாக கட்டுப்படுத்த ஜிம்னிமா(Gymnema) இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ ஆய்வுகளில் நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு குறைவான இன்சுலின் தேவைப்படுவது தெரியவந்துள்ளது. 


மேலும் சிறு குறிஞ்சான் இலைகள் நாக்கின் இனிப்பு சுவைமொட்டுக்களை தற்காலிகமாக தடை செய்து அதற்கான ஆர்வத்தினைத் தடுத்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இலை கணயத்தில் உள்ள செல்களை புத்துயிர்க்கச் செய்து இன்சுலின் சுரப்பினை மேம்படுத்துகிறது. உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. 

 சிறுகுறிஞ்சான் விதைகள் வாந்தியினைத் தூண்டக் கூடியது. சளியினை போக்க வல்லது. வேர்ப்பகுதி இருமலுக்கு சிறந்த மருந்து. வயிற்று வலியினை போக்கி வலுவினைத் தருகிறது. குளுமைப் படுத்தும் செயல் கொண்டது. சிறுநீர் போக்கினை தூண்ட வல்லது. மாதவிடாயினை தடுக்கக்கூடியது. வயிற்று வலியினை போக்க உதவுகிறது. 


சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

 பூரான், வண்டு, செய்யான் செவ்வட்டை முதலியவற்றின் விஷங்கள் உடலில் தங்கினால் அதன் மூலம் பலவித வியாதிகள் பெருகும். இதற்கு சிறுகுறிஞ்சான் இலையில் மிளகு ஐந்து வைத்து அரைத்து சுண்டக்காய் அளவு எடுத்து இருவேளை சாப்பிட்டால் அனைத்து விஷ ரோகமும் போய்விடும். ஆனால் விடாமல் ஒரு மண்டலம்(48 நாட்கள்) சாப்பிட வேண்டும். கடுகு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும். 

 உடல்மேல் வரும் தடிப்பு, பத்து, படை, இவைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர அவை மறைந்துவிடும். ரத்தத்தை சுத்தம் செய்து உடலை வனப்பாக வைக்கும். குறிஞ்சானில் சபோனின் மற்றும் பாலிபெப்டைடுகள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. இலைகளில் ஜிம்னீமிக் அமிலம் மற்றும் குர்மாரின் காணப்படுகின்றன. இவை மட்டுமின்றி ஜிம்னமைன் என்னும் அல்கலாய்டும் காணப்படுவதால், இவை செயல்திறன் மிக்க வேதிப்பொருட்களாகவும் பயன்படுகிறது. 


தகவல் - http://www.valaitamil.com/gymnema-benefits-diabetes_10295.html