தமிழ் மூலிகை மருத்துவத்தின் மகத்துவம் கூறும் வலைத்தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி!

திப்பிலி கொடி வகையை சார்ந்தது. கொடியில் காய்க்கும் காய்தான் திப்பிலி என்றழைக்கப்படுகிறது. செடியின் வேரும் மருத்துவகுணம் வாய்ந்ததாக இருக்கிறது. அவை சிறு முடிச்சுகளுடன் நீண்டு மெலிதாக காணப்படும். அதனை கண்டந்திப்பிலி என்று அழைக்கிறோம். திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது.


உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. நுரையீரல் மற்றும் தலையின் சைனஸ் பகுதிகளில் தேங்கிய சளியை அகற்ற உதவுவதால் இதற்கு "கோழையறுக்கி" என்ற சிறப்பு பெயரும் உண்டு. திப்பிலி பசியை தூண்டும். இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது. சிறந்த குரல் வளத்தை பெற துணைபுரியும். ரத்த சோகையை நீக்கும். 


மூளை தாதுகளை பலப்படுத்தும். ஆண்மை சக்தியை அதிகரிக்கச்செய்யும். திப்பிலி மிளகை விட காரமானது. உடலுக்குள் அதி வேகமாக செயல்பட்டு வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்தும். உடலில் அதிக நேரம் வெப்பத்தை தேக்கி, உடலுக்கு சூட்டை அளித்து, ஊக்கியாக செயல்படும். நிணநீர் நாளங் களையும் சுத்தம்செய்யும். சுக்கு, மிளகு, திப்பிலி சேரும் திரிகடுகு சூரணத்தில் முக்கியமான கூட்டுப் பொருளாக திப்பிலி விளங்குகிறது. திப்பிலியை எந்த மருந்தில் சேர்த்தாலும் அதன் செயல் திறன் அதிகரிக்கும்.


அதனால் அதனை பல்வேறு முக்கிய சித்த மருந்துகளில் சேர்க்கிறார்கள். குளிர் காலத்தில் உண்டாகும் ஆஸ்துமா, மூக்கடைப்பு, நீரேற்றத்தால் உண்டாகும் தலைவலி மற்றும் மூட்டு வலிகளுக்கு திப்பிலி சிறந்த மருந்தாக திகழ்கிறது.


 சிறுவர்களுக்கு ஆஸ்துமாவால் உண்டாகும் மூச்சிரைப்பு, ஒவ்வாமை காரணமாக உண்டாகும் தொடர் தும்மலுக்கு 2 கிராம் திப்பிலி பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும்.


பெரியவர்கள் 2 கிராம் திப்பிலி பொடியை வெற்றிலையில்வைத்து தேன் கலந்து மென்று சாப்பிடவேண்டும். கல்லீரல், மண்ணீரல் வீக்கம் கொண்டவர்கள் 100 கிராம் திப்பிலியை வறுத்து பொடி செய்து, 100 கிராம் கரிசலாங்கண்ணி கீரை பொடியுடன் கலக்க வேண்டும். அத்துடன் 100 கிராம் பொடித்த நெற்பொரி, 100 கிராம் நாட்டு சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்விக்கலையும் இது குணப்படுத்தும்.


திப்பிலி உஷ்ண தன்மை கொண்டதாக இருப்பதால், பெண்களுக்கு ஆரோக்கியமான சினைமுட்டை உருவாவதற்கு உதவி புரிகிறது. 2 கிராம் திப்பிலி பொடியை 1/2 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய்யில் கலந்து மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாம் நாளிலிருந்து ஆறுநாட்கள் சாப்பிட்டால் ஆரோக்கியமான சினைமுட்டை உருவாகும். இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வெதுவெதுப்பான நீர் அருந்தவேண்டும்.


மூட்டு வலிக்கு திப்பிலி பொடி 2 கிராம் எடுத்து 100 மி.லி. பாலில் கலந்து தினமும் பருகவேண்டும்.30 நாட்கள் பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.


உடல் வலி, முதுகுவலி மற்றும் வாத நோய்களுக்கு கண்டந்திப்பிலி 5 கிராம் அரைத்து பாலில் கலந்து குடிக்கவேண்டும். திப்பிலி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. காய கற்ப மூலிகை. ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிறந்த முதலுதவி மருந்தாக இது செயல்படுகிறது. திப்பிலியில் தயாரிக்கப்படும் "திப்பிலி ரசாயனம்" என்ற மருந்து ஆஸ்துமா, மூக்கடைப்பு, சைனஸ் தலைவலிக்கு சிறந்தது. 3 கிராம் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வரவேண்டும்.


திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப் போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. திப்பிலிப்பொடி, கடுக்காய்ப்பொடி சம அளவு எடுத்து தேன்விட்டு குழைத்து1/2 டீஸ்பூன் அளவு காலை, மாலை என இருவேளை உண்டு வந்தால் இளைப்பு நோய் நீங்கும்.


திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை, முப்பிணி நீங்கும். திப்பிலியை பொடியாக்கி 1:2 விகிதம் வெல்லம் கலந்து உட்கொள்ள விந்து பெருகும். நெய்யுடன் கலந்து சாப்பிட ஆண்மை பெருகும். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் சம அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். சுக்கை மேல் தோல் நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். மிளகு திப்பிலி இரண்டையும் சுத்தம் செய்து இளம் வறுப்பாக தனித்தனியே வறுத்துஎடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து பொடித்து பின் மூன்றையும் ஒன்றாகக் கலந்து காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் 1-2 கிராம் அளவு காலை, மாலை என இருவேளையும் உண்டு வர இருமல்,ஆஸ்துமா, ஜுரம், வயிற்றுவலி, வயிறு உப்பிசம் பசியின்மை தொண்டை வலி மற்றும் தொண்டைப்புண் ஆகியவை குணமாகும்.


திப்பிலி 50 கிராம், கரிசலாங்கண்ணி இலை 25 கிராம், 1/2 லிட்டர் நீரில் போட்டு நீரைச் சுண்டக் காய்ச்சிய பின் நிற்கும் திப்பிலியையும் தழையையும் இள வறுப்பாய் வறுத்துப் பொடித்த எடைக்குச் சமமாகப் பொரிப்பொடி சேர்த்து அதே அளவு சர்க்கரை கூட்டி 5 கிராம் அளவு 2 வேளை தொடர்ந்து சாப்பிட்டுவர இருமல், களைப்பு நீங்கும்.


திப்பிலி 10 கிராம், தேற்றான் விதை 5 கிராம் சேர்த்துப் பொடியாக்கி கழுநீரில் 5 கிராம் எடை அளவைப் போட்டு 7 நாள் காலையில் குடித்துவர வெள்ளை, பெரும்பாடு நீங்கும்.


திப்பிலிப் பொடி, கடுக்காய்ப் பொடி சம அளவாக எடுத்துத் தேன் விட்டுப் பிசைந்து இலந்தைப் பழ அளவு இருவேளை தொடர்ந்து 3 மாதம் சாப்பிட்டுவர இளைப்பு நோய் குணமாகும்.


திப்பிலிப் பொடி 10 கிராம் அரை மி.லி.பசுவின் பால் விட்டு காய்ச்சி 2 வேளை குடித்துவர இருமல், வாய்வு, மூர்ச்சை, முப்பிணி குணமாகும். திப்பிலி 200 கிராம், மிளகு, சுக்கு வகைக்கு 100 கிராம், சீரகம் 50 கிராம், பெருஞ்சீரகம் 50 கிராம், அரத்தை 50 கிராம், இலவங்கப்பட்டை 25 கிராம், ஓமம் 50 கிராம், தாளீசபத்திரி, இலவங்கப்பத்திரி, திரிவலை, இலவங்கம்,ஏலம், சித்திர மூலம் வகைக்கு 50 கிராம் இவற்றை இளவறுப்பாய் வறுத்துப் பொடித்து 1 கிலோ சர்க்கரை கலந்து தேன்விட்டுப் பிசைந்து அரை தேக்கரண்டியளவு 40 நாட்கள் 2 வேளை சாப்பிட்டு வர இளைப்பு, ஈளை, இருமல், வாய்வு குணமாகும்.


திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.


பஞ்ச தீபாக்கினி சூரணம்


சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலக்காய், சீரகம்... இவற்றின் கூட்டணிக்கு இப்படி ஒரு பெயர் உண்டு. சுக்கை மேல் தோல் சீவியும், பின் எல்லாவற்றையும் லேசாகப் பொன் வறுவலாக வறுத்தும் பொடி செய்துகொள்ளவும். அந்தக் கூட்டணிப் பொடியின் எடைக்குச் சமமாக நாட்டு ஆர்கானிக் வெல்லம் கலந்துகொண்டால், பஞ்ச தீபாக்கினி சூரணம் ரெடி. பசியைத் தூண்டும் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவுக்கு தேனில் கலந்து குழந்தைகளுக்குக் காலை உணவுக்கு முன் கொடுத்து வந்தால், மதியம் லன்ச் பாக்ஸ் எப்போதும் காலியே!.


தகவல் - pettagum.blogspot.com

|